சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மலையாளிகளின் மகத்தான பங்களிப்புக்கு பிரதமர் புகழாரம்

392 0

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இங்குள்ள மலையாளிகள் மகத்தான பங்களிப்பு அளித்துள்ளதாக பிரதமர் லீ சியென் லூங் புகழாரம் சூட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் இயங்கிவரும் மலையாளிகள் சங்கத்தின் நூற்றாண்டு விழா விருந்தில் நேற்றிரவு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பங்கேற்று வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

உலகின் பல நாடுகளில் தீவிரவாதம், மதவாதம் மற்றும் நிறவெறி மேலோங்கிவரும் வேளையில் இதுபோன்ற வியாதிகளால் சிங்கப்பூர் இன்னும் பாதிக்கப்படாமல் உள்ளது. இதைப்போன்ற அழுத்தங்களில் இருந்து நமது கலப்பு கலாசாரத்தை நம்மால் பாதுகாத்து கொள்ள இயலும்.

வேறுபாடுகளை வலிமையாக மாற்றுவது எப்படி? என்பதை இங்குள்ள மலையாள சமூகத்தார் நமக்கு காட்டியுள்ளனர். எண்ணிக்கையில் சிறிதாக இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இதற்கு முன்னுதாரணம் ஆக முன்னாள் அதிபர் தேவன் நாயர், முன்னாள் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், சிங்கப்பூர் நிதி மேலாண்மை குழுமத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் ரவி மேனன் ஆகியோரை பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 1900-ம் ஆண்டுவாக்கில் கேரளாவில் இருந்து மலையாளிகள் சிங்கப்பூரில் குடியேற தொடங்கினர். சிறிய நாடான சிங்கப்பூரில் தற்போது சுமார் 26 ஆயிரம் மலையாளிகள் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூர் பாராளுமன்றத்தில்  தற்போது மூன்று மலையாளிகள்  எம்.பி.க்களாக பதவி வகித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மந்திரியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment