தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா கட்டணம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதனால், திரைத்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறி, கடந்த மாதம் தியேட்டர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரி மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களுக்கான புதிய கேளிக்கை வரி செப்டம்பர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியானது 20 சதவீதம் குறைக்கப்பட்டு 10 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற திரைப்படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட படங்களுக்கு 7 சதவீத கேளிக்கை வரியும், மற்ற மொழி திரைப்படங்களுக்கு 14 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி குறைப்புக்கு பிந்தைய சினிமா கட்டணம் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் புதன்கிழமை முடிவு செய்ய உள்ளது. இத்தகவலை தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி.யுடன், புதிதாக அமலுக்கு வந்துள்ள கேளிக்கை வரியும் சேர்க்கப்பட உள்ளதால் சினிமா டிக்கெட் விலை மேலும் அதிகரிக்கலாம்.