திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

335 0

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர காட்டுப் பகுதிக்கு விறகு தேடச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான நபரொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை காலை சேருநுவர காட்டுப் பகுதிக்கு விறகு தேடச் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்று மாலையாகியும் வீடு சேராமையினால் அவரது குடும்பத்தினர் சேருநுவர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் குடும்பத்தினர் பிரதேசவாசிகளுடன் அவரை தேடியும் கிடைக்கவில்லை.

மீண்டும் சேருநுவர பொலிஸாரும் ஊர் மக்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை சேருநுவர காட்டுப் பகுதியில் தேடுதல் நடாத்திய போது, அவர் விறகு எடுப்பதற்காகச் சென்ற துவிச்சக்கர வண்டி கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து. மீண்டும் தேடுதல் மேற் கொண்ட போது துவிச்சக்கர வண்டி கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 மீற்றர் தூரத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு இன்று காலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லா சென்று விசாரணைகளை மேற்கொண்டதோடு, சடலம் அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment