தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான இடைநீக்கத்தை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

367 0

201608201821454743_DMK-MLAs-need-to-cancel-the-order-suspended-mutharasan_SECVPFதி.மு.க. உறுப்பினர்கள் மீதான இடைநீக்கத்தை சபாநாயகர் ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு தராததால் குறுவை சாகுபடி நடக்கவில்லை. இதனால் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடி நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை மத்திய அரசு தேசிய பேரிழப்பாக கருத வேண்டும்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. மேலும் இந்த மாத இறுதிக்குள் மேட்டூர் அணையில் இருந்து போதுமான தண்ணீர் கிடைக்காவிட்டால் நேரடி சம்பா நெல் சாகுபடிக்கு ரூ.64 கோடியே 30 லட்சத்திற்கு மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு ஆறுதல் மட்டுமே தரும்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந்தேதி அனைத்து மத்திய அரசு தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலைநிறுத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பங்கு பெறும். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழக சட்டசபையில் வீண் விவாதங்களில் உறுப்பினர்கள் பங்கு பெறுவதை கைவிட்டு காவிரி நதிநீர், பாலாறு, முல்லை பெரியாறு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். தி.மு.க.உறுப்பினர்கள் மீதான இடைநீக்கத்தை சபாநாயகர் ரத்து செய்ய வேண்டும்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றால் அதில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.