எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு தந்துவிடுங்கள் -தினேஷ் குணவர்த்தன

369 0
dinesh-gunawardanaநாங்கள் கடந்த ஒருவருடமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இனியும் எம்மால் பொறுமையாக இருக்க முடியாது. தயவுசெய்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு தந்துவிடுங்கள் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.

 இது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம்.51 உறுப்பினர்களுடன் செயற்படும் எமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும்.
இந்தியா மற்றும் பிரிட்டனாக இருந்திருந்தால் இந்நேரம் எமது எதிரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன மேலும் குறிப்பிடுகையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கு கிடைக்கவேண்டும். கடந்த ஒருவருட காலமாக இதனை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.
ஆனால் எமக்கு அந்தப் பதவியை கொடுக்க விருப்பம் இன்மையினால் தவிர்த்து வருகின்றனர்.கடந்த ஒருவருட காலமாக நாங்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றோம். அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து வந்துள்ளோம்.
தற்போது பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு 22 ஆசனங்களே உள்ளன. ஆனால் பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணிக்கு 51 ஆசனங்கள் உள்ளன. எனவே யாருக்கு பலம் அதிகம் என்பதனை புரிந்து கொள்ளலாம்.
இந்த வி்டயத்தில் சபாநாயகர் விரைவில் தீர்மானம் எடுக்கவேண்டும். நாங்கள் எதிர்க்கட்சி என்ற ரீதியில் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம். எனவே இனியும் தாமதிக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு தந்துவிடுங்கள். இது தொடர்பில் சபாநாயகருடன் பேச்சு நடத்தி விட்டோம்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நாங்களே உரித்தானவர்கள். அந்தப் பதவி எமக்கு வழங்கப்படவேண்டும் என்றார்.