தேசிய தமிழ் தின விழா இந்த முறை யாழ். இந்து கல்லூரியில் எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் நடைபெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய தமிழ் தின விழா தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ராஜாங்க அமைச்சர் இந்த தகவல்களை வௌியிட்டார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டு தேசிய தமிழ் தின விழா யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள யாழ்ப்பாண இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ் பண்பட்டு ஊர்வலம் மற்றும் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் சில விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
வட மாகாணத்தில் இராணுவத்திடம் உள்ள பாடசாலைகள் தொடர்பாக வினவப்பட்ட போது,
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு தனித்தனியாகவும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு ஒன்றாகவும் சந்திப்புக்களை நடத்தியுள்ளோம்.
இதனடிப்படையில் வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் மற்றும் இராணுவ சுற்றாடலுக்குள் இருக்கின்றது. எனவே அவை தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்திருக்கின்றேன்.
அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் பல இடங்களில் இராணுவம் தங்கள் முகாம்களை அகற்ற இணக்கம் காட்டியுள்ளதாக தெரிவித்தார்.