திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம்! – திஸ்ஸ விதாரண

5521 0

tissa-vitharanaதிருகோணமலையில் அமெரிக்காவின் தளம் அமைக்கப்படவுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவின் பாதுகாப்பை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாக சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு கூறினார். “மெகா பொலிஸ் ” அபிவிருத்தி திட்டம் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்தது. ஆனால் அரசாங்கம் அதனை திட்டமிட்டு திருகோணமலைக்கு இடமாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்ப்பதாகும். அமெரிக்காவின் 7 ஆவது கடற்படையின் முகாமொன்று திருகோணமலை துறைமுகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகம் பூராகவும் அமெரிக்காவினால் அமைக்கப்படும் படை முகாம் வலைப்பின்னலில் புதிய கடற்படை முகாம் இலங்கையில் அமையப்பெறவுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் கப்பல்களை பயன்படுத்தி இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை அமெரிக்கா ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றது.

எமது நாட்டுக்கு உதவி செய்ய வருவதைப் போன்று திருகோணமலைக்குள் புகுந்து தெற்காசியாவின் பாதுகாப்பை தனக்கு கீழ் கொண்டுவருவதே அமெரிக்காவின் திட்டமாகும். இதற்கு இலங்கை அரசாங்கம் துணை போகின்றது. நாட்டில் தற்போது பாரிய நிதி நெருக்கடி காணப்படுகிறது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சரவை 400 மில்லியன் டொலர் செலவில் அமெரிக்காவின் ஜெட் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. என்றார்.

Leave a comment