நாட்டை பிளவுபடுத்தும் பிரிவினைவாத அரசியல் அமைப்பை உருவாக்க அரசாங்கம் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கியுள்ளது. மாகாணசபை சட்டத்தை நிறைவேற்ற எவ்வாறு விலை பேசப்பட்டதோ அதேபோல் புதிய அரசியலமைப்பு விடயத்திலும் சதிகள் இடம்பெறுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரசியல் அமைப்பை உருவாக்கும் விடயத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிராகரிக்க மக்கள் விடுதலை முன்னணி துணைவரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் அமைப்பை தடுக்கும் மக்கள் தெளிவூட்டல் செயற்பாடாக தேசிய சுதந்திர முன்னணி நேற்று கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்திய துண்டுப்பிரசுரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் விலைவாசியை குறைப்பதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று தேங்காய் விலை, எரிவாயு விலை உள்ளிட்ட மக்களின் அன்றாட பொருட்களுக்கான விலையை உயர்த்தி வருகின்றனர். ஒருபுறம் நாட்டின் மக்களுக்கு வயிற்றில் அடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்ற அதே நிலையில் மறுபுறம் பிரிவினைவாதிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாகாணசபை சட்டத்தை நிறைவேற்ற சில அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரிய அளவில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதே முறையில் தான் நாட்டினை பிரிக்கும் பிரிவினைவாத அரசியல் அமைப்பும் நிறைவேற்றப்படவுள்ளது.
பிரிவினைவாத செயற்பாட்டை தடுத்த, சமஷ்டியின் விளைவுகளை நாட்டிற்கு கற்பித்த, ஒற்றையாட்சியை உருவாக்க போராடிய ரோஹண விஜயவீர உருவாக்கிய மக்கள் விடுதலை முன்னணியின் நிகழ்கால தலைவர்களிடம் நாம் கேட்பது ஒன்றேயாகும். ரோஹண விஜயவீரவின் கொள்கையை ஒரு வீதமேனும் இன்னும் பின்பற்றி வருகின்றீர்கள் என்றால் இந்த பிரிவினைவாத அரசியல் அமைப்பை எதிர்த்து பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டும். அரசியல் அமைப்பிற்கு எதிராக இவர்கள் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நாட்டிற்கும் அதேபோல் ஜே.வி.பி யின் கொள்கைக்கும் பாரிய அழிவை ஏற்படுத்தும். இதனை மறந்துவிடாது செயற்பட வேண்டும் என்றார்.