வவுனியா மாவட்டத்தில் யானைகளால் அதிகம் பாதிக்கப்படும் பிரதேசங்களை உடன் 10 தினங்களுக்குள் சமர்ப்பித்தால் அதனை ஆராய்ந்து அப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் தொடரும் வனஜீவராசிகளால் ஏற்படும் பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் தலமையில் மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் , அமைச்சின் படிப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் , பிரதேச செயலாளர்கள்ங, பொலிசார் எனப் பலரும் கலந்துகொண்ட மேற்படி கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது இதன்போதே மேற்கன்டவாறு தெரிவித்தார்.
இங்கு இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டத்தில் யானைகளால் அதிகம் பாதிக்கப்படும் பிரதேசங்களை இனம்கண்டு பிரதேச செயலாளர்கள் அதுதொடர்பான தரவுகளை 10 தினங்களுக்குள் சமர்ப்பித்தால் அப்பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும். இதேவேளை அண்மையில் நெடுங்கேணி வைத்தியசாலையின் வளாகத்திற்குள்ளேயே யானை புகுந்த நிலையில் வைத்தியரின் துணிச்சலால் சேதமின்றி தப்பியதாக சுட்டிக்காட்டப்பட்டது
இதற்குப் பதிலளித்த அமைச்சர் வைத்தியசாலைப் பிரதேசத்தினை சுற்றி உடனடியாக யானைக்கான பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு பணித்தார்.இதேநேரம் குரங்குகளினால் ஏற்பனும் வாழ்வாதாரப் பாதிப்புத் தொடர்பான தரவுகள் அதிகரிக்கும் நிலையில் அதற்குத் தீர்வு எட்டுமாறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதனால் குறித்த விடயத்திற்கு ஓர் தீர்வை எட்டும் நோக்கில் அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேநேரம் மன்னார் மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக 10 இறங்குதுறைகள் அமைக்க முன்வந்தபோதும் அப்பகுதியை தற்போது குறித்த அமைச்சு உரிமைகோருவதனால் அபிவிருத்திக்கு தடையாக இருப்பது தொடர்பில் அமைச்சின் பணிப்பாளரிடம் முறையிடப்பட்டபோதும் தீர்வு கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பதிலளித்த அமைச்சின் பணிப்பாளர் நாயகம் குறித்த விடயத்திற்கான சிபார்சினை வழங்குமாறு நாம் பிராந்திய பணிப்பாளரைக் கோரியிருந்தோம் அவரின் சிபார்சு தற்போது கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விரைவில் அதற்கான அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்