வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் விடுவிக்க இணங்கிய இராணுவத்தினர் பலாலி ஆசிரியர் கலாசாலையை விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினர் வசமுள்ள மக்களிற்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பாடசாலைகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கல்வி அமைச்சர் இராதாகிருஸ்ணன் , நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் , மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் , மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஸ் , மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , வட மாகாண ஆளுநரின் செயலாளர் , படை அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் 6 பாடசாலைகளை விடுவிப்பதன் மூலம் மீள்குடியேறும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினையும் , மேலும் நிலங்களை விடுவிப்பதன் மூலம் எஞ்சிய மக்களின் மீள்குடியேற்றத்தினையும் உறுதி செய்துகொள்ளமுடியும். அத்தோடு கற்பித்தல் நடவடிக்கைக்காக ஆசிரியர்களின் ஆற்றலை விருத்தி செய்ய பலாலி ஆசிரியர் கலாசாலையினையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த விடயங்கள் தொடர்பில் பதிலளித்த படை அதிகாரிகள் வலிகாம்ம் வடக்குப் பகுதியில் கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களின் இடையே காணப்பட்ட படை முகாம்களை ஒன்றினைக்கும் பணி இடம்பெறுகின்றது. இதன்போது பல இடங்களில் குறிப்பிட்டளவு மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படும். அத்தோடு வலி வடக்கின் பிற பகுதிகளிலும் கவனம் செலுத்தப்படுகின்றன. இதேநேரம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கோரப்பட்ட பாடசாலைகளில் மூன்று பாடசாலைகள் டிசம்பர் மாதத்திற்கு முன்பாக விடுவிக்கப்படும்.
இதேநேரம் நான்காவது பாடசாலையான பலாலி வடக்கு பாடசாலை தொடர்பில் 15 தினங்களில் பதிலளிக்க முடியும் எனத் தெரிவித்த இராணுவத்தினர் படைத் தலமையகத்தின் மிக அருகே உள்ள பலாலி ஆசிரியர் கலாசாலையினை தற்போது விடுவிக்க முடியாது எனவும் பதிலளித்தனர்.-