இந்த அரசின் தலைவிதி ஐகோர்ட்டில் நிர்ணயிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

361 0

சென்னை ஐகோர்ட்டில் 4-ந் தேதி விசாரணைக்கு வரும் வழக்கில் இந்த அரசின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு கனவு பறிபோனதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். திராவிடர் மாணவர் கழகம் சார்பில் மறைந்த மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னிலை வகித்தார்.

மாணவி அனிதாவின் உருவப்படத்தை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று இங்குள்ள குதிரைபேர அரசு நம்பவைத்து நம் மாணவர்களை கழுத்தறுத்தது. அப்படி கழுத்தறுக்க துணை நின்றது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு. ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்கத்தயார் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த விலக்கும் கொடுக்க முடியாது என்று கடைசி நேரத்தில் கைவிரித்து அனிதா பலியானதற்கு மத்திய அரசும், அதை தட்டிக்கேட்க திராணியில்லாமல் இருக்கும் குதிரை பேர அ.தி.மு.க. அரசு தான் காரணம்.

மாணவர்களை வைத்து அரசியல் பண்ணுகிறார்கள் என்கிறார்கள். ஆனால் நீட் தேர்வின் பாதிப்புகளை சென்னை உயர்நீதிமன்றமே பட்டியலிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை தெளிவுபடுத்தி தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றம் மத்திய-மாநில அரசுகளின் தோல்வியை அந்த தீர்ப்பில் புட்டு புட்டு வைத்திருக்கிறது.

சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று உத்தரவிட வேண்டிய கவர்னர் ஏன் நாக்பூருக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார்?

அமைச்சர்களோ ஒப்பந்தங்கள் போடுவதிலும், ஊழல் செய்வதிலும் மும்முரமாக இருக்கிறார்களே தவிர, உயிரிழந்த அனிதா பற்றியோ, அவரது உயிரை பறித்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் டாக்டர் கனவை சிதைத்த ‘நீட்’ தேர்வு குறித்தோ அவர்களுக்கு கவலையில்லை.

மக்களை திசைத்திருப்ப, முதலில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தார்கள். அந்த ஆணையத்திற்கு ஓய்வுபெற்ற ஒரு நீதிபதியை நியமித்தார்கள். நீதிபதியை நியமித்து விட்டு அமைச்சர்களே ஆளுக்கொரு பேட்டி கொடுக்க தொடங்கினார்கள்.

தங்கள் தலைவியின் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம், பதவிபேரம் நடத்தியவர்கள் வக்கிர புத்தியுடன் தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி ஒரு வதந்தியை பரப்பினார்கள்.

ஆட்சியாளர்களோ, அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளோ, எப்படி திசை திருப்பினாலும், தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. ஒருமுறை ஏமாந்தது போதும் இனியொரு முறை ஏமாந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அக்டோபர் 4-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்கில் இந்த அரசின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது. அன்றைய தினம் அனிதாவின் தியாகத்திற்கு உரிய விடை கிடைக்கும்.

அந்த விடை தமிழகத்தில் எதிர்காலத்தில் எந்த மாணவரின் டாக்டர் கனவும் சிதைக்கப்படாமல் பாதுகாக்கும். மாநில உரிமையை அடகு வைத்து மண்டியிட்டு கிடப்போர் கோட்டையில் இருந்து தூக்கிவீசப்படுவார்கள். சமூக நீதிக்காகவும், கிராம மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், அனிதா செய்த தியாகம் மாணவர் சமுதாயத்தை வாழ வைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.அனிதாவின் சகோதரர் ச.ஆ.மணிரத்தினம் நன்றி கூறினார்.

Leave a comment