முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க மருத்துவக்குழு மறுப்பு

382 0

Cp46_S9UMAMJaJTஇலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை மருத்துவக் குழுவினர் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை நடாத்த மறுத்துள்ளது என வடக்கு மாகாண சபை அறிவித்துள்ளது.

முன்னாள் போராளிகள் தடுத்துவைத்துள்ள தடுப்பு முகாம்களில் அவர்களுக்கு விச ஊசியோ அல்லது விசம் கலந்த உணவுகளோ வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து அது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் வடக்கு மாகாணத்துக்கு வருகைதந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை நடாத்துவதற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து தெரிவுசெய்யப்படும் சில முன்னாள் போராளிகளை பரிசோதிப்பதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்ததையடுத்து அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க மருத்துவக் குழுவின் மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடையவுள்ள நிலையில், முன்னாள் போராளிகளின் உடல் நிலையைப் பரிசோதிப்பதற்கான மருத்துவ வசதியுடன் தாங்கள் வருகைதரவில்லை என அமெரிக்க மருத்துவக் குழு தெரிவித்துள்ளதோடு, பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாணசபையின் அழைப்பிற்கிணங்க 14 முன்னாள் போராளிகள் தம்மை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளை வடக்கு மாகாணத்திலுள்ள நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.