பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது

26794 197

அரச நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சையின் நுண்ணறிவு பரீட்சை வினாத்தாளை ரத்துச்செய்து அதற்காக மீண்டும் பரீட்சையை நடாத்துமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமாரவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த தினத்தில் இடம்பெற்ற அரச நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சையின் 5 வினாத்தாள்களில் நுண்ணறிவு பரீட்சை வினாத்தாளில் உள்ளடங்கியிருந்த சில வினாக்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்த நிலையில் ,அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதன்படி , குறித்த விசாரணை அறிக்கையை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், குறித்த வினாத்தாளை தயாரித்த வெளி நிபுணர்களுடன் கூடிய வினாத்தாள் தொகுப்பு குழுவினரை பரீட்சை செயற்பாடுகளில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சை செயற்பாடுகளுடன் தொடர்புடைய இரகசிய தன்மையை பாதுகாத்தல், வினாத்தாள்களை தயாரித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடைத்தாள் தயாரித்தல் , கணணி அமைப்பின் இரகசிய தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சர் இதன்போது அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.

Leave a comment