சிங்கள மாணவ குழுவொன்று தலையில் கறுப்பு பட்டி அணிந்து லக்ஸ்மன் கிரியெல்ல வருகைக்கு எதிர்ப்பு

414 0

IMG_0042கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றுக்கு உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த போதும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவ குழுக்களின் எதிர்ப்பு காரணமாக அமைச்சரின் வருகை இடை நடுவில் கைவிடப்பட்ட சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவ விடுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வானது பிற்பகல் 2.30 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நிகழ்வு சம்பவமானது கிழக்கு பல்கலைக்கழக சமூகத்திற்கு வெறுமனே ஏமாற்றத்தையே கொடுத்தது.

சிங்கள மாணவ குழுவொன்று தலையில் கறுப்பு பட்டி அணிந்து, அமைச்சர் வருகையின் நிமிர்த்தம் ஒழுங்கு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த பிரதான இடங்கெல்லம் கறுப்பு நிற பொலித்தீன் கடதாசிகளைப் பறக்கவிட்டிருந்தனர்.
கல்வியை விற்கும், மாணவர்களை அடக்கும் ‘அரசாங்கம்’ பொய்யான திறப்பு விழாவிற்கு வருவது எமக்கு விருப்பமில்லை, விஞ்ஞானம் மற்றும் வர்த்தக முகாமைத்துவப் பீட மாணவர்களின் வகுப்புத்தடையை நீக்கு போன்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை தொங்கவிட்டிருந்தமையை காணக்கூடியதாகவுள்ளது.

அமைச்சரின் வருகையை அறிந்த மாணவர்கள் காலையில் இருந்து பிற்பகல் சுமார் 6.00 மணிவரை கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை விடுதி வளாகத்திற்கு செல்லும் பிரதான வாயிற்கதவு பகுதியில் குழுமி நின்றனர்.மாணவர்களின் எதிர்ப்பை அறிந்த ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த மாணவர்களுடன் பல முறை கலந்துரையாடிய நிலையிலும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாத நிலையில் அமைச்சரின் நிகழ்வை அறிக்கையிட வருகைதந்த ஊடகவியலாளர்கள் பல மணி நேரம் கார்த்திருந்து ஏமாற்றத்துடன் சென்றதை அவதானிக்ககூடியதாகவுள்ளது.

அமைச்சரின் வருகை காரணமாக பெரும் சிரமத்தின் மத்தியில் ஏற்பாடு செய்த அனைத்து விதமான ஏற்பாடுகள் மற்றும் பல்கலைகழக ஊழியர்களின் காத்திருப்பு என்பன வெறுமனே ஏமாற்றத்தையே கொடுத்திருந்த நிலையில் வீடு சென்றதை அவதானிக்க முடிந்தது.கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 27 மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை உடனடியாக நீக்குமாறு கோரி மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்துக்கு முன்பாக அப்பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மையின மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.