சிங்களக் கட்சிகள் பெரிய தவறிழைத்தன. அதுவே கடந்த 30ஆண்டு கால யுத்தத்திற்கு வழியமைத்தது.தற்போது இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.தற்போதுதான் வடகிழக்கு பிரச்சினைக்கு ஒரு தீர்வினை வழங்கமுடியும் என உயர்கல்வி நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் பெண்கள் விடுதியை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
2015ஆம் ஆண்டு அரசியலில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தியமைக்காக குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்றி கூற வேண்டும். இன்று மிகவும் சிறப்பான நாளாகும். நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியை இன்று மாத்தறையில் கொண்டாடுகின்றது. ஆனால் நான் அங்கு செல்லவில்லை. இங்கு வந்திருக்கின்றேன். பிரதமரிடம் சென்று இந்த நிகழ்வு இரு மாதங்களுக்கு முன்னரே ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டது எனவே நான் இங்கு செல்ல வேண்டும் என கூறினேன்.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது அது தெற்காசியாவில் சிறந்த நாடாக திகழ்ந்தது. கிழக்கு மாகாணம் சுவிற்சர்லாந்து போல காணப்பட்டது. உள்நாட்டு பிரச்சனைகள் இருக்கவில்லை. அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாகவும் சமாதானத்துடனும் வாழ்ந்தனர். அச்சமயத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் சிங்கப்பூரை இலங்கை போல மாற்றுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னரான காலப்பகுதிகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்நாட்டில் அனைத்து கட்சிகளும் தவறிழைத்தன. குறிப்பாக சிங்களக் கட்சிகள் பெரிய தவறிழைத்தன. அதுவே கடந்த 30ஆண்டு கால யுத்தத்திற்கு வழியமைத்தது.
எனக்கும் கொழும்பில் பல சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். சிங்களவருக்கும் தமிழருக்கும் இந்நாட்டில் சம உரிமை உள்ளது. ஆனால் இரு பிரதான கட்சிகளும் அதனை வழங்க மறுத்ததன் காரணமாகவே கடந்த 30ஆண்டு கால கொடிய யுத்தம் நடந்ததாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். இரு பிரதான கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக அவர்கள் ஒன்றிணைந்து அதனை வழங்கவில்லை.
ஆனால் தற்Nபுhது அவர்களுக்கு இரண்டாவது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இரு பிரதான கட்சிகளும் இணைந்துதான் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு ஒரு தீர்வை வழங்க முடியுமென அதிகளவான மக்கள் கூறுகின்றார்கள்.
பாராளுமன்ற அரசியலமைப்பு ஆணைக்குழு சிறப்பாக செயற்பட்டுவருகின்றது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் அதற்கு வருகை தருகின்றனர். சிங்கள் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் கடும்போக்கு சிந்தனைகளை கைவிடவேண்டும் என்பதை நான் கட்டாயமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்தவேளையில் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வினை ஏற்படுத்த முடியும்.
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் போதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார பிரச்சனை காரணமாக தமது கல்வியை கைவிடுகின்றார்கள். தற்போது ஒரு ஓழுக்கமான தலைவர்களை கொண்ட அரசாங்கம் அமைந்திருப்பதால் எமது நாட்டின் மீது நம்பிக்கை கொண்டு அதிகளவான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தருகின்றார்கள்.
1948ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான அபிவிருத்திப் பணிகள் அம்பாறை, இகினியாகலை போன்ற பகுதிகளிலேயே ஆரம்பிக்கப்பட்டன. தற்போது எமது வருட வருமானம் குறைவடைந்துள்ளது. அப்பிரச்சனையை தீர்க்கும் முகமாக ஜனாதிபதியும் பிரதமரும் நெளிநாடுகளுக்குச் சென்று அவர்களின் உதவியை கோரியதன் காரணமாக இன்று அதிகளவான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றார்கள். அதன்காரணமாக எமது பொருளாதார பிரச்சனைக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அனைத்து நாடுகளும் எந்த நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கு உதவ முன்வரவேண்டும்.
ஐ.தே.கட்சியில் சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்கள் முஸ்லிம்களென அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள். இதையிட்டு நாம் பெருமை கொள்ளலாம்.