இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் எனது பிள்ளை மீண்டும் வரப்போவது இல்லை – மாணவி வித்தியாவின் தாய்

6969 0

தனது மகளை கொலை செய்த கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் கொலைக்கு நீதியை பெற்று கொடுக்கவும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயார் சிவலோகநாதன் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வித்தியாவின் தாய் இதனை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் எனது பிள்ளை மீண்டும் வரப்போவது இல்லை .

எங்களுக்காக குரல் கொடுத்த அனைவரும் இரு கரம் கூப்பி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னை போல ஒரு தாய் இனி அழக்கூடாது.

வித்தியாவுக்கு நடந்த கொடுமை போன்றும் இனி யாருக்கும் நடக்க கூடாது’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறை அதிகாரிகளுக்கு நன்றி. சட்டத்தரணிகளுக்கு நன்றிகள். கடந்த இரண்டு ஆண்டுகளாக வித்தியாவுக்காக குரல் கொடுத்த ஊடகங்கள் அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என வித்தியாவின் தாயார் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று 7 பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்க மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment