இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் செயற்பாடுகளை ஏற்க முடியாது என யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் தனது தீர்ப்பை அறிவித்து நீதிபதி இளஞ்செழியன் இதனை தெரிவித்திருந்தார்.
மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் என அறியப்படும் மாகாலிங்கம் சசிக்குமாரை நிரபராதியாக்க இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேற்கொண்ட செயற்பாடுகளை ஏற்க முடியாது என நீதிபதி இதன் போது குறிப்பிட்டிருந்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் என அறியப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் உட்பட 7 பேருக்கு இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்க மன்றால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய ,
02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார் ,03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ,04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன் , 05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் , 6 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன் ,08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன் ,09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலா 30 வருட ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முதலாம் மற்றும் 7 ஆம் சந்தேகத்துக்குரியவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு நீதாய விளக்கமன்றின் மூன்று நீதிபதிகளாலும் ஏகமனதாக வழங்கப்பட்டதாகும்.
இதற்கு முன்னர், நீதிபதிகள் தங்களது தீர்ப்பு அறிக்கையை தனித்தனியே வாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.