அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு தாக்குதல் நடாத்தும் போது கைது செய்யாது பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களையும் அதற்காக கைது செய்ய வேண்டும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (27) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரோஹிங்ய மக்கள் முதலில் அகதிகளாக இலங்கைக்கு 2008 ஆம் ஆண்டுதான் வந்தார்கள். அப்போது இந்த பிக்குகள் எங்கு இருந்தனர். அப்போது இருந்தது, ராஜபக்ஷாக்களின் அதிகாரம்தானே, அதனால் பிக்குகளுக்கு அது பிரச்சினையாக தெரியவில்லை.
புத்தபெருமான் எங்காவது இதுபோன்ற மோசமான செயற்பாட்டுக்கு ஆதரவாக உபதேசம் செய்துள்ளாரா?
அகதிகள் தொடர்பான ஒழுங்கு விதிகள் பின்பற்றப்பட்டே ரோஹிங்ய அகதிகள் 31 பேரும் இந்நாட்டில் இருந்தனர். எமது நாட்டிலிருந்து யுத்தம் இடம்பெற்ற போது 20 லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றனர். அப்போது, ஐ.நா.வின் உதவியின் கீழ் அவர்களுக்கு அடைக்களம் கொடுக்கப்பட்டது. அவ்வாறு எமது நாட்டைப் பாதுகாத்த ஐ.நா. வின் நடவடிக்கைக்குத் தான் இந்த நாட்டில் நாம் எதிராக செயற்படுகின்றோம்.
இந்த நடவடிக்கை புத்தபெருமானின் போதனையைப் பின்பற்றுபவர்களின் நடவடிக்கை அல்ல. புத்தபெருமானின் காலத்தில் இருந்த தேவதத்தின் நடவடிக்கையே இவை. பி.பி.சி. சர்வதேச சேவையில் பௌத்த பிக்குகள் அகதிகளுக்கு எதிராக செயற்பட்டதாகவே செய்தி வெளியிட்டிருந்தது. புத்தபெருமானின் போதனைகளில் அகதிகளுக்கே அதிகம் உதவி செய்யுமாறு கூறியுள்ளனர்.
பௌத்த தேரர்களுக்கு மனித கௌரவம் இல்லாதுள்ளது. இதுவே தேரர்களுக்கு அடிப்படையில் அவசியமானது. நேற்று தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எந்த புத்தகத்தில் சமயம் படித்தார்களோ தெரியவில்லை.
புத்தபெருமானிடம் தன்னுடைய இனம் எதுவென கேட்கப்படுகின்றது. அவர் அதற்கு மனித இனம் எனப் பதிலளித்துள்ளார். இந்த உண்மையை அறியாதவர்களே இங்குள்ளனர் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.