இலங்கையின் இரண்டாவது இருதய மாற்று அறுவை சிகிச்சையை, கண்டி போதனா வைத்தியசாலையின் மருத்துவர் குழாம் வெற்றிகரமாக இன்று (27) நடத்தி முடித்தனர்.
அளுத்கமையைச் சேர்ந்த சச்சினி செவ்வந்தி (19) என்ற இளம் பெண், கடந்த ஆறு வருடங்களாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதே நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது சகோதரி, ஏழு வருடங்களுக்கு முன் மரணமானார்.
பத்து சதவீதமே இயங்கிக்கொண்டிருந்த செவ்வந்திக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் அனில் அபேவிக்ரம தீர்மானித்தார். அதன்டி, இந்தக் குழுவினர், விபத்தில் மரணமான நளிந்த சகுலசூரிய என்ற இளைஞனின் இருதயத்தை செவ்வந்திக்கு வெற்றிகரமாக மாற்றி சிகிச்சை அளித்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சையையும் இதே மருத்துவர் குழுவே செய்திருந்தது.
நளிந்தவின் ஏனைய உடல் பாகங்களும் தேவையான நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.