பாதுகாப்பற்ற ரயில் வீதிகளில் வாயில் பராமரிப்பு பணிகளுக்கு, தகுதி வாய்ந்த சமுர்த்தி பயனாளர்களை பயன்படுத்தவும் அவர்களுக்கு மாதாந்தம் 22,500 ரூபாவை வழங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
அனைத்து ரயில் குறுக்கு வீதிகளுக்கும் பாதுகாப்பினை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையாகும்.
இதன்படி, குறித்த குறுக்கு வீதிகளில் பாதுகாப்பு சமிஞ்சைகளை பொறுத்துவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த நடவடிக்கைகள் முடியும் வரை விபத்துக்களை தடுப்பதற்காக, ரயில் குறுக்கு வீதிக்கான வாயில்களை இயக்குகின்ற நபர்களை பயன்படுத்த வேண்டும்.
இந்தப் பணியை முன்னெடுக்கும் ஒருவருக்கு 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. எனினும், குறித்த கொடுப்பனவு போதுமான அளவில் காணப்படாமையினால் கடந்த காலங்களில் சிலர் பணியில் இருந்து நீங்கிச் சென்றுள்ளனர்.
இந்தநிலைமைக்கு தீர்வாக ரயில் குறுக்கு வீதிகளின் பாதுகாப்பினை நாள் முழுவதும் வழங்கும் பொறுப்பினை, குடும்பத்தின் நிலையான பிரதிநிதி ஒருவரிடம் ஒப்படைக்கும் வகையில், அப் பாதுகாப்பு கதவுகளை பராமரிக்கும் பணியினை தகுதி வாய்ந்த சமூர்த்தி குடும்பங்களுக்கு வழங்குவதற்கும், அதற்காக ஒரு குறுக்கு வீதிக் கதவுக்காக 22,500 ரூபாவினை மாதாந்த கொடுப்பனவாக ஒரு குடும்பத்துக்கு வழங்குவதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.