வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வசம் உள்ள பாடசாலைகள்,ஆலயங்கள்¸ தேவாலயங்கள்¸பள்ளிவாசல்¸விகாரைகள்¸சுகாதார நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா அரசாங்க அதிபர் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ்¸வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார¸கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பணிப்பாளர் முரளீதரன்¸கல்வித் திணைக்கள அதிகாரிகள்¸பாதுகாப்பு பிரிவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இராதாகிருஸ்ணன் மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினர் வசம் அல்லது அவர்களுடைய ஆளுமைக்கு கட்டுப்பட்டுள்ள பாடாசலைகள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சிற்கு பெற்றுத் தருமாறு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன்போது மீண்டும் இயங்க வேண்டிய தேவை உள்ள பாடசாலைகளை இயக்குவதற்கும் அதற்கான கட்டிடங்கள் தளபாடங்களை கல்வி அமைச்சு மூலம் பெற்றுக் கொடுப்பதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் இயங்க வேண்டிய தேவையில்லாத பாடசாலைகளை மூடிவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பூந்தோட்டம் புனரமைப்பு முகாமில் 6 பேர் மாத்திரமே இருக்கின்றார்கள் எனவும் அதற்கு வேறு ஒரு இடத்தை தெரிவு செய்து அதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் முல்லைத்தீவு பகுதியில் அமைந்துள்ள இரண்டு ஆலயங்களை மிக விரைவில் விடுவிப்பதற்கும் அதே நேரம் அங்குள்ள 131 ஏக்கர் காணியையும் அதாவது 81 உரிமையாளர்களுக்கு கையளிக்கவும் தாங்கள் தீர்மானித்திருப்பதாகவும் பாதுகாப்பு பிரிவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் அளவில் அநேகமான காணிகளை விடுவித்து கொள்ள முடியும் என் தான் எதிர்பார்ப்பதாகவும் இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்