மீன் பிடிப்பதற்காக டைனமைட் உள்ளிட்ட வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களுக்கு எதிராக, சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர பாதுகாப்பு பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மீனவ ஆலோசனை சபை கூட்டத்தின் போதே, அமைச்சர் கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இது குறித்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்தக் கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் சிலவற்றில், டைனமைட் உள்ளிட்ட வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடிப்பது அதிகரித்துள்ளதாகவும், இதனால், மீன்வளம், பவளப் பாறைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாகவும், மீனவப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோல், டைனமைட்டை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்கள் நுகர்வுக்கு தகுதியற்றவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, டைனமைட்களை பயன்படுத்தி மீன்பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீனவர்களுக்கு இதுபோன்ற வெடி பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து கைதுசெய்யவும், பாதுகாப்பு தரப்பினருக்கு அவர் பணித்துள்ளார்.