சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆய்வுச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அமெரிக்கா பயணமாகியுள்ளனர்.
குறித்த பயணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல்சிறிபால டீ சில்வா, பாலித ரங்கேபண்டார, சந்திராணி பண்டார, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த பயணத்தின் போது நிதி மற்றும் வியாபாரம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதுள்ளதுடன் அதில் அமெரிக்க காங்கிரசின் வியாபாரம் தொடர்பான பிரதானி கிவென் மூர் கலந்துகொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் அமைவிடத்தை மையப்படுத்தி அதிக விளைவைத் தரக்கூடிய முதலீடுகள் தொடர்பிலான காரணிகளை கிவென் மூர் விளங்கியதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்தார்.
காங்கிரசின் சர்வதேச நடவடிக்கைகள் தலைவர் டெட் எஸ் யொஹோவுடனான கலந்துரையாடல் மிகுந்த பயனுடையதாக அமைந்ததாக அமைச்சர் ரங்கேபண்டார மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலை மிகவும் சிறந்த நிலையில் காணப்படுவதாகவும், உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் எதிர்கால நடவடிக்கைகளை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையிலுள்ள அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி வழங்குவதற்கும் அபிவிருத்தி பணிகளுக்கு உதவி வழங்குவதற்கும் காங்கிரசின் சர்வதேச நடவடிக்கைகள் தலைவர் டெட் எஸ் யொஹோ உடன்பட்டதாக அமைச்சர் பாலித ரங்கேபண்டார குறிப்பிட்டார்.
குறித்த சுற்றுலாவில் இலங்கை பிரதிநிதிகளுக்கு அமெரிக்க பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அரசியலமைப்பு தொடர்பில் விசேட பயிற்சி ஒன்றிலும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த ஆய்வுச்சுற்றுலா எதிர்வரும் மாதம் 2ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.