மேற்கு கரை யூதர்கள் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது பாலஸ்தீன தொழிலாளி நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை தாக்குவதும், அவர்களை இஸ்ரேல் போலீசார் மற்றும் ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையான சம்பவமாகிவிட்டது.
மேற்கு கரை பகுதியில் ஹர் அடார் என்ற இடத்தில் யூதர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பாலஸ்தீனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வேலைபார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பாலஸ்தீன தொழிலாளர்கள் வழக்கம் போல் அங்கு வேலைக்கு சென்றனர். அப்போது அவர்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை சுட்டு தள்ளினார்.
இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். தாக்குதல் நடத்திய பாலஸ்தீனரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.