வடகொரியா நடத்திவரும் அணுஅயுத சோதனைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீதும், 26 அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
உலக நாடுகளின் கடும் கண்டனங்களையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இது அமெரிக்க அரசை எரிச்சலடைய செய்துள்ளது. இதன்காரணமாக வடகொரியா மீது அமெரிக்க அரசு பல தடைகளை விதித்துள்ளது.
இந்த தடைகளுக்கு அமெரிக்கா, ஜப்பான், சீனா உட்பட பல நாடுகள் அதரவளித்துள்ளதால் வடகொரியாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மற்ற பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா செயல்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவிவருகிறது.
இந்நிலையில், வடகொரியாவிற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீது அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. அதோடு அவ்வங்கிகளை சேர்ந்த 26 வங்கி அதிகாரிகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்காவில் அவ்வங்கிகளின் அனைத்து சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் “இந்த தடைகளின் மூலம் வடகொரியாவை முழுமையாக தனிமைபடுத்தி கொரியா தீபகற்பத்தை சமாதானம் நிறைந்த மற்றும் அணுஆயுதம் இல்லா பகுதியாக மாற்றும் எண்ணத்தை நிறைவேற்ற முடியும்”, என கூறினார்.