தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார்.
பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள். 210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியல் உண்ணாவிரதம்இருக்கிறார்கள். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. 2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்கேயும் மைத்ரிபாலா சிறிசேனாவும் சொல்கிறார்கள். எனவே, மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக இலங்கை வந்து பார்வையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று பேசினேன்.
இதற்கு சிங்களப் பெண் ஒருவர் திட்டினார். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களர்களே தகராறு செய்தனர். நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர் என்று அவர் கூறினார்.
ஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் அமைப்பினர் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.