ஜெயலலிதா என்னைப்பார்த்து கையசைத்து வாழ்த்தினார்: ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. பேட்டி

4379 0

வெற்றி சான்றிதழுடன் ஆசி பெற சென்றபோது ஜெயலலிதா என்னை பார்த்து கையசைத்து வாழ்த்தினார் என்று ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் 72 நாட்கள் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே. போசும் ஜெயலலிதாவை பார்த்ததாகவும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் சென்ற போது ஜெயலலிதா கையசைத்து வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல்-அமைச்சர் அம்மாவிடம் வாழ்த்து பெறுவதற்காக வெற்றி சான்றிதழுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன்.

காலை 10 மணிக்கு அங்கு சென்றபோது தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் மருத்துவமனை 2-வது மாடியில் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் இருந்தேன். பிறகு காலை 11 மணியளவில் அம்மாவின் உதவியாளர் பூங்குன்றன் அறைக்கு சென்றேன்.

அங்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தஞ்சை ரங்கசாமி, அரவக் குறிச்சி செந்தில் பாலாஜி ஆகியோரும் அமர்ந்திருந்தனர். 3 பேரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை அம்மாவிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்று கேட்டோம்.

அப்போது உதவியாளர் பூங்குன்றன் அம்மா சிகிச்சை பெற்று வருகிறார். நீங்கள் வெற்றி பெற்றதை டெலிவி‌ஷன் மூலம் பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.எனவே இன்னும் 5 நாட்களில் அம்மா கார்டன் வந்து விடுவார். அங்கேயே வந்து பூங்கொத்துடன் அம்மாவிடம் வாழ்த்து பெற்று செல்லலாம். இப்போது பார்க்க வேண்டாம் என்று கூறினார்.

மேலும் வெற்றி சான்றிதழை நகல் எடுத்துக் கொண்டு நீங்கள் புறப்படுங்கள் என்று பூங்குன்றன் கூறியதையடுத்து செந்தில் பாலாஜியும், ரங்கசாமியும் சென்று விட்டனர்.

நான் எப்படியாவது அம்மாவை பார்த்துவிட வேண்டும் என்று ஆர்வமாக நின்று கொண்டிருந்தேன். மதியம் 2.30 மணியளவில் கார்டனில் பணியாற்றும் பாதுகாவலர்கள் 3 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.அவர்களிடமும் அம்மாவை பார்க்க வேண்டும் என்று கூறினேன். அப்போது அவர்கள் சிறிது தயக்கத்துடன் அருகே உள்ள கண்ணாடி அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர்.

நான் நின்றிருந்த இடத்திற்கும், அம்மா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அறைக்கும் 15 மீட்டர் தூரம் இருக்கும். அந்த அறையின் கண்ணாடியின் மீது போடப்பட்டிருந்த திரையை சிறிது விலக்கி என்னை பார்க்கும் படி பாதுகாவலர்கள் கூறினர்.

அப்போது அம்மாவை நான் நேரில் பார்த்தேன். என்னை பார்த்ததும் அம்மா படுத்திருந்த நிலையிலேயே கைகளை அசைத்து என்னை வாழ்த்தினார். ஒரு வினாடியில் பாதுகாவலர்கள் என்னை அங்கிருந்து வெளியே அழைத்து வந்து விட்டனர்.இப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அம்மாவின் சிகிச்சை குறித்து தேவையற்ற கருத்துக்களை சொல்லி வருகிறார்.

இது போன்று அம்மாவை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் ஈடுபடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment