தமிழகத்தில் 9 மாதத்தில் 8 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

358 0

தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 8 ஆயிரம் பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவி வந்த டெங்கு காய்ச்சல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர்.இதனையடுத்து சென்னையில் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.கே.கே.நகர், ராணி அண்ணாநகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை நேற்று நடத்தியது. வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த வருடம் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளாவில் இருந்து தமிழக எல்லைகளில் பரவி, தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.காய்ச்சல் பாதிப்பு எந்த மாவட்டத்தில் அதிகமாக இருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் பொது சுகாதாரத் துறை கணக்கெடுத்து வருகிறது.

மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இதில் டெங்கு அறிகுறிகள் உள்ளவர்களை மட்டும் வார்டுகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 8 ஆயிரம் பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 18 பேர் இதுவரையில் உயிர் இழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம், இந்திய குழந்தைகள் நல நிபுணர்கள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து வகை காய்ச்சலால் ஏற்படும் இறப்புகள் குறித்து தணிக்கை மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்கள் மூலம் காய்ச்சல் சிகிச்சையின் போது பின்பற்ற வேண்டிய தேசிய நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

அரசு நெறிமுறைகளை பயன்படுத்தி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவர்கள் செய்யக் கூடியவை, கூடாதவை குறித்த அறிவுறுத்தல் கடிதமும் அனைத்து மருத்துவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனைகள் தாமதிக்காமல் நோயாளிகளை உடனே அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

நோயாளிகளின் தட்டணுக்கள் 50 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள நிலையில் நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளிலோ, வட்ட அளவிலான மருத்துவ மனைகளிலோ வைத்துக்கொள்ள கூடாது.அந்த நோயாளிகளை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கோ, மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளுக்கோ அனுப்ப வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் செயல்பட ஒவ்வொரு மருத்துவரும் உறுதியேற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment