தினகரனுக்கு ஆதரவாக இருப்பதால் ஆளுங்கட்சியினர் எங்களை மிரட்டுகிறார்கள்: முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்

269 0

தினகரனுக்கு ஆதரவாக இருப்பதால் ஆளுங்கட்சியினர் எங்களை மிரட்டுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க (அம்மா) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது.கூட்டத்தில் அ.தி.மு.க (அம்மா) அணியின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அமைச்சர்கள் தங்களது நிலையை மறந்தும், தமிழகத்தின் வளர்ச்சியை மறந்தும் மாறி மாறி பேசி வருகிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையானது. இதைப்பற்றி இவர்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் இறப்பிற்கு நீதி விசாரணை வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை. இவர்கள் ஏதோ நாடகத்தை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வைக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன் ஏற்கனவே வலியுறுத்தினார். நீதி விசாரணை நடத்தப்பட்டால் தற்போது பொறுப்பில் உள்ள ஒரு நீதிபதிதான் அந்த விசாரணையை நடத்த வேண்டும்.

நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் தற்கொலை தொடர்பாக என்மீது போடப்பட்ட வழக்கிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது என்னை துன்புறுத்துவதற்காக புனையப்பட்ட வழக்கு. எவ்வளவு தொந்தரவு அளித்தாலும் அவற்றை தாங்கி கொண்டு இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இதேபோன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருப்பதால் ஆளுங்கட்சியினர் எங்களை மிரட்டுகின்றனர். எந்த மிரட்டலுக்கும் நாங்கள் பயப்படமாட்டோம். இந்த இயக்கத்தை கட்டிக்காப்பாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய ஒரே தலைவர் டி.டி.வி தினகரன் மட்டும்தான்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தினார். உண்மையில் தர்மயுத்தத்தில் ஈடுபட்டு இருப்பது நாங்கள் தான். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஊழல் அரசு என கூறிய ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சரவையில் சேர்த்து கொண்டால் இது ஊழல் அரசு இல்லையா? அன்று ஊழல் அரசு என்று சொன்னது எந்த வாய்? இன்றைக்கு இந்த அரசு நல்ல அரசு என்று சொல்வது எந்த வாய்? தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அவர்களுக்குதான் இரட்டை சிலை சின்னம் கிடைக்கும். சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும். தொண்டர்களின் ஆதரவு இருக்கும் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

Leave a comment