இலங்கையில் இருந்து 1980ம் ஆண்டுகளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான சிறார்கள் தத்துக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் டென்மார்க் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் இருந்து சிறார்களை தத்தெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் ஐரோப்பிய அதிகாரிகளிடம் இலங்கையும் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் டென்மார்க்கின் சமுக வழக்குகளை கையாளும் திணைக்களமும், தத்தெடுக்கும் முகவர் நிலையமும் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன.
குறித்த இரண்டு அமைப்புகளுமே தத்தெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக செயற்பட்டுள்ளன.
எனவே இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு, ஏலவே வெளியாக்கப்பட்டுள்ள தத்துக் கொடுக்கப்பட்டுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களது உண்மையான பெற்றாரின் படங்கள் என்பவற்றை ஒப்பிட்டு, இது குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டென்மார்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.