பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிட நிர்ணயிக்கப்பட்ட திகதிகள்

434 0

பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் பரீட்சைகளின் பெறுபேறுகள் இனிவரும் காலத்தில் வெளியிடப்படும் நிர்ணயிக்கப்பட்ட திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில் குறித்த திகதிகள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதியும் வெளியிடப்படும் என கல்வி அமைச்ச அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தாமதமடைவதன் காரணத்தால் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து கல்வி அமைச்சரால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு கல்வி அமைச்சரால் விடுக்கப்பட்ட பணிப்பரையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதன் ஊடாக, 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்தும் மாணவர்கள், புதிய பாடசாலை அனுமதிக்காக குறித்த காலத்துக்குள் விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன், விண்ணப்பங்கள் தொடர்பில் மேன்முறையீடு செய்யவேண்டி ஏற்படுமாயின், அதனை மேற்கொள்வதன்மூலம், ஆறாம் தரத்துக்கான கற்றல் நடவடிக்கைகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்க சந்தர்ப்பம் ஏற்படும்

அத்துடன், சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், இயன்றளவு விரைவாக உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க முடியும்.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு பெறுபேறுகள் தாமதமடைவதால், உயர்கல்விக்கு பிரவேசிப்பக்கும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே, புதிய திகதிகளின் மூலம் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதை விரைவுபடுத்த முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment