கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கொமான்டர் டீ.கே.பி.தஸநாயக்கவின் பிணை கோரிக்கை மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 10 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த பிணை கோரிக்கை மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதே கொழும்பு மேல்நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் கடற்படை பேச்சாளர் உட்பட கடற்படையின் ஆறு பேருக்கு பிணை வழங்குமாறு இந்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சந்தேகத்துக்குரியவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டால், சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்தே குறித்த பிணை மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த 6 பேரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.