சப்ரகமுவ மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில், ஆயுட்காலம் முடிவடைந்ததன் பின்னர், அதன் ஆட்சியை தாம் பொறுப்பேற்பதாக மாகாண ஆளுநரான ஜனாதிபதி சட்டத்தரணி மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை மீண்டும் அமைக்கப்படும்வரை அதன் ஆட்சிப் பொறுப்பு தம்மால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறாவது சப்ரகமுவ மாகாண சபைக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.
அதில், 4 லட்சத்து 88 ஆயிரத்து 714 வாக்குகளுடன் 28 ஆசனங்களைக் கைப்பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது.
ஐக்கிய தேசியக் கட்சி 14 ஆசனங்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.
அரசிலமைப்பின் பிரகாரம், மாகாண சபையின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததன் பின்னர் அதன் ஆயுட்காலம் முடிவடையும்.
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியும், வட மத்திய மாகாண சபையின் முதலாவது அமர்வு 2012 ஒக்டோபர் இரண்டாம் திகதியும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியும், வட மத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் ஒக்டோபர் இரண்டாம் திகதியும் முடிவடைய உள்ளது.
இதேவேளை, நகர சபை, மாநாகர சபைகள் கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் பிரதேச சபைகள் திருத்தச் சட்டமூலங்கள் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த சட்டமூலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.