அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். டி.எஸ் சேனநாயக்க வயதில் மூத்தவர். முதலாவது பிரதமராகும் அவரைத் தொடர்ந்து தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என பண்டாரநாயக்க கருதினார்.
டி.எஸ்.சேனநாயக்கவின் பின்னர் பண்டாரநாயக்க பிரதமராகியிருந்தால், சேனநாயக்கவைத் தொடர்ந்து ஐ.தே.க வின் தலைமைப் பதவியை பண்டாரநாயக்க பெற்றிருப்பார். இது நடந்திருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியிருக்காது.
எனினும், நாட்டின் முதலாவது பிரதமராகப் பதவி வகித்த டி.எஸ் தனது மகனான டட்லி சேனநாயக்கவை அடுத்த பிரதமராக்க வேண்டும் எனக் கனவு கண்டிருந்தார். இந்த விடயத்தில் பண்டாரநாயக்கவின் பிரதமர் ஆசையைத் தவிடுபொடியாக்குவதற்கான தனது திட்டத்திற்கு டி.எஸ்.சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவலவை பயன்படுத்தினார். தனக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்களை அறிந்து கொண்ட பண்டாரநாயக்க அரசாங்கத்தை விட்டு விலகினார்.
இந்த வரலாற்றுச் சம்பவத்தை 2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்த மைத்திரி மற்றும் ரணில் ஆகியோரால் அரசியல் யாப்பில் அல்லது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலுடன் ஒப்பீடு செய்து கொள்ள முடியும்.
வெள்ளையர்களிடமிருந்து நாட்டின் ஆட்சியைத் தமது அதிகாரத்திற்குள் கொண்டு வரும் நோக்குடன் 1947ல் இடம்பெற்ற தேர்தலில் சேனநாயக்க மற்றும் பண்டாரநாயக்க ஆகியோர் ஓரணியில் இணைந்து கொண்டனர். இதேபோன்று மகிந்தவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக 2015ல் மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் ஓரணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டனர்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தான் பெற்றுக்கொள்வேன் என்று மைத்திரி துளியளவும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அதிபர் தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்ற பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் மைத்திரி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரி ஏற்றுக்கொள்ளா விட்டிருந்தால் அல்லது கட்சியின் அரசியல் யாப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாதிருந்தால், எந்தவொரு அதிகாரங்களும் இல்லாத ஒரு அதிபராக மைத்திரி விளங்கியிருப்பார்.
அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்திருக்காவிட்டால், மைத்திரி தனது பதவிக்காலம் முடியும் போது ஓய்வுபெற வேண்டும். இதன் காரணமாகவே, அதிபராகப் பதவியேற்ற அன்றைய நாள் தான் மீண்டும் அதிபர் பதவிக்காகப் போட்டியிட மாட்டேன் என மைத்திரி தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையைத் தொடர்ந்தே மைத்திரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அண்மையிலும் மைத்திரி அறிவித்திருந்தார்.
அரசியல் யாப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால், இனிவருங் காலங்களில் அதிபர் தேர்தல் என்பது இடம்பெற மாட்டாது. பொதுத்தேர்தல் மட்டுமே இடம்பெறும். ஆனால் தான் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மைத்திரி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஆகவே அடுத்து வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்காக மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் போட்டியிடுவார்களா? 2015 அதிபர் தேர்தலில் மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளைத் தமக்கிடையே பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்ட போது, அடுத்த பொதுத் தேர்தலை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பாக இவர்களுக்கிடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவில்லை எனின் அது ஆச்சரியமளிக்கக் கூடிய விடயமாகும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பில் மைத்திரி எந்தவொரு எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கவில்லை எனின், இவ்விரு தலைவர்களும் அரசியல் யாப்பில் மாற்றத்தைக் கொண்டு வருதல் மற்றும் அதிகாரமற்ற அதிபர் பதவியை மைத்திரி ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட பிரதமர் பதவிக்கு ரணிலைத் தெரிவு செய்தல் மற்றும் அடுத்த பொதுத்தேர்தல் தொடர்பாக எவ்வாறான உடன்படிக்கையை மேற்கொண்டிருப்பார்கள். இந்தச் சூழலானது தற்போது மாற்றமடைந்துள்ளது.
ராஜபக்சாக்கள் ஐ.தே.க மேடைகளில் ஏறினால், மைத்திரி அடுத்த அதிபர் தேர்தலில் அல்லது பொதுத்தேர்தலில் போட்டியிட்டால், ராஜபக்சக்களின் அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவதும் கூட்டு எதிர்க்கட்சியை அழிப்பதுவுமே மைத்திரியின் முதலாவது பணியாக இருக்கும். இதன் பின்னர் இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள முடியும்.
இது இடம்பெறாவிட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக மைத்திரி போட்டியிடும் அதேவேளையில், மகிந்த அல்லது அவரது பெயரால் கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து யாராவது போட்டியிட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் பிரிக்கப்படும். மைத்திரி, ரணில் அரசாங்கத்தின் ஆட்சியைக் கலைத்து விட்டு பிரதமராக வேறொருவரை நியமித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைத்தால், ராஜபக்சக்களின் அரசியல் அத்துடன் முடிவிற்கு வரும்.
இது நடந்தால், கூட்டு எதிரணியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மைத்திரியின் பின்னால் அணிவகுப்பார்கள். இவர்கள் அரசாங்கத்திற்குள் உள்ளெடுக்கப்படுவார்கள்.
இதன்பின்னர் ராஜபக்சக்கள் ஐ.தே.க சார்பாகப் போட்டியிட்டால் அது தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. 1982 பொதுத் தேர்தலில், பசில் இதனைச் செய்தார். 1982 பொதுத் தேர்தலில் அனுரா வேட்பாளராகப் போட்டியிடுவதை உறுதிப்படுத்துவதற்காக பசிலும் மகிந்தவும் முயற்சி செய்தனர். எனினும், விஜய-சந்திரிக்கா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்றதுடன் கொப்பேக்கடுவவை வேட்பாளராக நியமித்தது. இதன் பின்னர் கொப்பேகடுவவைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மகிந்த மற்றும் பசில் முன்னெடுத்தனர்.
திருமதி பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சேனநாயக்கவிற்கு இடையில் ‘கை’ சின்னத்தைப் பெற்றுக் கொள்வதில் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றதால் கொப்பேகடுவவால் ‘கை’ சின்னத்தைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. கொப்பேகடுவ ‘கை’ சின்னத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, விஜய-சந்திரிக்கா கூட்டணி மற்றும் இலங்கரட்ன ஆகியோர் தினேசிற்குச் சொந்தமான ‘சக்கரம்’ சின்னத்தின் கீழ் கொப்பேகடுவ போட்டியிடுவதற்கான பேச்சுக்களை நடத்தினர். கொப்பேகடுவவிற்க ‘சக்கரம்’ சின்னத்தை தினேஸ் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக தினேசைச் சந்திப்பதற்காக மகிந்தவை அனுரா அனுப்பினார்.
1982 அதிபர் தேர்தலில், ;றுகுணு பெரமுன’ என்கின்ற அமைப்பை ராஜபக்சக்கள் உருவாக்கியதுடன் இதன்மூலம் ஜே.ஆர் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக கொப்பேகடுவவிற்குத் தோல்வியை ஏற்படுத்துவதற்கான நகர்வுகளை முன்னெடுத்தனர். அந்தவேளையில், மகிந்த, பசில் மற்றும் ஏனையோர் அனுராவைத் தம்வசப்படுத்தி தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க முனைந்தனர். அனுரா இதற்கு இணங்கவில்லை. மகிந்தவும் விடவில்லை.
எனினும், 1982ல் ஐ.தே.க ஆட்சிக்காலத்தை ஆறு ஆண்டுகள் நீட்டிப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்ற போது தனது ஆதரவை வழங்குவதற்காக பசில், ஐ.தே.க வுடன் இணைந்தார். பசில், ஐ.தே.க மேடைகளில் உரையாற்றினார். தனது நன்றியைத் தெரிவிப்பதற்காக மகாவலி அமைச்சர் காமினி திசநாயக்க, பசிலுக்கு தனது அமைச்சுப் பதவியை வழங்கினார். மகிந்தவுடன் பேச்சுக்களை நடாத்துவதற்காகவே பசில் இந்த ஆட்டத்தில் ஈடுபட்டார். ஆகவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரி ஒன்றாக இணைத்தால், ராஜபக்சக்கள் ஐ.தே.கவுடன் இணைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
எனினும், மைத்திரி-ரணில் அரசாங்கம் கலைக்கப்படும் என்பதை நாங்கள் கற்பனை செய்ய முடியாது. ரணிலுடன் இணைந்து மைத்திரி அரசாங்கத்தை நடத்த முடியாவிட்டால், மைத்திரியால் ஒன்றும் செய்ய முடியாது. குறிப்பாக அதிபர் பதவியும் ஒழிக்கப்பட்டால் மைத்திரி எதிர்க்கட்சிக்குத் தாவவேண்டிய நிலை தான் ஏற்படும். இதன்பின்னர் ராஜபக்சாக்களின் அரசியல் முடிவிற்கு வரும்.
மைத்திரி எதிர்க்கட்சி உறுப்பினரானால், எதிர்க்கூட்டணியிலுள்ள பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மைத்திரியால் பெறமுடியும். நிறைவேற்று அதிபர் முறைமை ஒழிக்கப்பட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் ரணில் அரசாங்கத்தைத் தோற்கடிப்பது அவ்வளவு கடினமானதல்ல என்பதை மைத்திரி அறிவார். இதன்பின்னர் ரணில் மற்றும் ஐ.தே.க ஆதரவுடன் தான் மைத்திரி அதிபரானார் என்கின்ற குற்றச்சாட்டிலிருந்தும் மைத்திரியால் தப்பித்துக் கொள்ள முடியும். இதன் பின்னர் மைத்திரியால், ரணில் மற்றும் ஐ.தே.க அரசாங்கத்தை முற்றாக அழிக்க முடியும்.
எனினும் ரணிலைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை மைத்திரி முன்னெடுப்பார் என்பதை நம்பமுடியாது. ‘அன்னம்’ சின்னத்திலேயே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அல்லது அதிபர் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மைத்திரிக்கு கோபத்தை ஏற்படுத்தாது இந்த ஆட்டம் விளையாடப்பட்டால், மைத்திரி அல்லது ரணில் அரசியலை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இவர்கள் அரசியலிலிருந்து வெளியேறுவதுடன், அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டால், அதிகாரம் எதுவுமற்ற அதிபர் பதவியானது ரணில் அல்லது மைத்திரி ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படாத அதிபராக மைத்திரி பதவியேற்பார் எனவும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணில், நிறைவேற்று பிரதமராகப் பதவிவகிப்பதற்கு மைத்திரி உதவுவார் எனவும் ஐ.தே.க உறுப்பினர்கள் கருதுகின்றனர். எனினும், பொதுத் தேர்தலானது முற்கூட்டி நடத்தப்பட்டால், மைத்திரி சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைத்துக் கொள்வார் என மைத்திரிக்குச் சார்பான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
இவ்விரு தீர்மானங்களில் எது நிறைவேறினாலும் கூட, இதில் வெளிநாடுகள் தலையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் உச்சமாகக் காணப்படுகின்றன. சிறிலங்காவைச் சீனாவின் கொலனித்துவமாக மாற்ற முயற்சி செய்த ராஜபக்ச மீண்டும் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முற்படுவதால், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இது ஒரு சவாலாக இருப்பதே வெளிநாடுகளின் தலையீட்டிற்கான காரணமாகும்.
ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம் – சிலோன் ருடே
மொழியாக்கம் – நித்தியபாரதி