ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஊர்மக்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் கிடையாது என உயர்கல்வி அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஒலுவில் மக்களுக்கு நிர்வாகம் கூறியுள்ளதாகவும் சிங்கள மாணவர்கள் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாகவும் தினேஷ் குணவர்தன தமது கேள்வியின் போதுசுட்டிக்காட்டினார்.
எனினும், அவரது கூற்றை உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நிராகரித்துள்ளார்.
மாணவர்கள் அன்றாட தேவைகளுக்காக கிராமத்திற்கு சென்று வருவதாகவும், விரிவுரைகளுக்கு செல்லாமல் ஊர்வலம் சென்றதாலே பரீட்சை எழுதமுடியாதநிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோசமான பகிடிவதை, நிர்வாகத்திற்கு இடையூறுசெய்தல், நிர்வாக கட்டிடத்தை வழிமறித்தல் போன்ற பாரிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சகல இன மாணவர்கள் மீதும் பல்கலைக்கழக சட்டத்தின் பிரகாரம் வகுப்புத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாரதூரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்கி பல்கலைக்கழகம்வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
9 சிங்கள மாணவர்களுக்கும் 7 முஸ்லிம் மாணவர்களுக்கும் வகுப்புத் தடைவிதிக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் சகல இன மாணவர்களுக்கும் சட்டம் ஒரேமாதியே அமுல்படுத்தப்படுகின்றது என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.