இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் 24 ஆம் திகதி அதாவது தியாகி லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது வருடத்தின் 10 வது நினைவு நாள் அன்று அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெற்றது.
அன்றைய தினம் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
21 ஆம்திகதி ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கே முன்னுரிமை என இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இலங்கை பிரிக்கப்படாது மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இருத்தல் வேண்டும். பிரிந்து செல்லுதலை (நாட்டை துண்டாடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட திருத்தங்கள்
உள்ளடக்கப்படுதல் வேண்டும். என்ற பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டதுடன் முன்மொழியவும் செய்தார்.
மேலும், ”புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்றது. அதில் ஒற்றையாட்சி என்ற சொற்பதம் நீக்கப்பட்டு ஒன்றுபட்ட இலங்கை என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே மிகப் பெரிய விடயம் ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான அரசின் இடைக்கால அறிக்கை சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.
இலங்கைக்குள் தமிழர்களின்தேசியத்தை குழிதோண்டிபுதைத்துவிட்ட சம்பந்தன் தியாகி திலீபனுக்கு மலர் மாலை அணிவித்தது காலத்தின் கொடுமை!
இன்று(26) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் இடம்பெற்றது. அங்கு சம்பந்தரின் பரிவாரங்கள் தமது வாக்கு வங்கியை பாதுகாக்க அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
70 வருடங்களுக்கு மேலாக தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடக்கியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த இடைக்கால அறிக்கை ஏற்படுத்தியுள்ளதால் இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார். என்பதே நிதர்சனம்.
தியாகி திலீபன் உண்ணாவிரத மேடையில் இருந்து “நான் மனரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.” என்றான். ஆனால் 30 வருடமாகியும் அவனது கனவு மெய்ப்படவில்லலை.
துரோத்தனங்களும் காட்டிக் கொடுப்புக்களும் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் தான் இதற்கு காரணம்.
தியாகி திலீபன் ‘களத்தில்’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். சம வேளை அவர் ஆசிரியர் தலையங்கத்தில் . “சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.” என எழுதியிருந்தார். அதுவே எம் இனத்தின் ஆத்ம தாகம் . இதன் வலி, வலிமை உயிர் கொடை வெள்ளை வேட்டி அரசியல் வாதிகளுக்கு புரியாது. புரிய வைக்கவும் முடியாது.
தியாகி லெப். கேணல் திலீபனுக்கு வீர வணக்கம்