இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

4433 0

இலங்கையில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுவதாகவும் அவற்றில் 15 சதவீதமானோர் மார்பக புற்றுநோயாளிகள் என்றும் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

புதிதாக நாளுக்கு 6 -7 பேர் வரை மார்பக புற்று நோயாளிகளாக இனங்காணப்படுகின்றனர். அவற்றில் 45 முதல் 60 வயது வரையான பெண்களே பெரும்பாலும் மார்பக பற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் இந்தப் பிரிவின் சிறப்பு மருத்துவரான டாக்டர் நைனா டி அல்விஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் ஆண்டுதோறும் 2 ஆயிரத்து 500 மார்பக புற்றுநோயாளிகள் உட்பட சுமார் 17 ஆயிரம் அனைத்து வகையிலான புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகின்ற அதேவேளை, 13 ஆயிரம் புற்று நோயாளிகள் மரணமடைகின்றார்கள் என்கின்றார் தேசிய புற்றுநோய் தடுப்புப் பிரிவின் இயக்குநரான டாக்டர் சுதத் சமரவீர.புற்றுநோய் வராமல் ஆரம்பத்திலே தடுப்பு மருந்து மூலம் தடுக்கின்ற வகையிலே குறிப்பாக பள்ளிக் கூடங்களில் 6ஆம் வகுப்பு மாணவியருக்கு HPV தடுப்பூசி போடப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 38 ஆயிரம் மரணங்கள் பதிவாவதோடு, 75 சதவீதமான மரணங்கள் இருதநோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களால் ஏற்படும் மரணங்கள் எனவும், 1985 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 416 என்று அறிக்கையிடப்பட்ட புற்றுநோயாளிகளின் மரணங்கள், 2005ஆம் ஆண்டு 9 ஆயிரத்து 403 ஆக அதிகரித்ததோடு, 2009ஆம் ஆண்டு தரவுகளின்படி இது 11 ஆயிரத்து 286ஆக கூடியிருப்பதாகவும், அறிக்கையிடப்பட்டுள்ளன.

Leave a comment