சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறேன்-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்

421 0

201608190849162458_I-am-ready-to-make-history-Chepauk-Super-Gillies-Anthony-Das_SECVPF‘தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சரித்திரம் படைக்க தயாராகவும், தாகமாகவும் இருக்கிறேன்’ என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆல்-ரவுண்டர் அந்தோணி தாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் செப்டம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. சென்னை சேப்பாக்கம், நத்தம், நெல்லை ஆகிய 3 இடங்களில் இந்த போட்டி நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கடந்த 10 நாட்களாக காலையிலும், மாலையிலும் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் அந்தோணி தாஸ்.

கடலில் வீசும் அசுர அலைகளுக்கு அஞ்சாமல் ஆழ்கடலில் வலைவீசி மீன்பிடிப்பதில் வல்லவரான அகன்ற தோள்களுக்கு சொந்தக்காரரான அந்தோணி தாஸ் கடின உழைப்பால் ஏழ்மையை வென்று கிரிக்கெட்டில் சாதித்து வருவது பற்றி பயிற்சிக்கு நடுவில் நிருபரிடம் பகிர்ந்து கொண்டார். அபாரமான நம்பிக்கையுடன் பேசிய அந்தோணி தாஸ் கூறியதாவது:-

கிரிக்கெட்டில் பெரிய வீரராக உருவெடுக்க வேண்டும் என்பதே சிறு வயது முதலே எனது கனவாக இருந்தது. டென்னிஸ் பால் மூலம் கிரிக்கெட் விளையாடிய இளம் பருவத்தில் நான் சிறப்பாக செயல்பட்டதை எங்கள் ஊரில் பலரும் பாராட்டுவார்கள். ஆனால் 7-வது வகுப்பு படிக்கையில் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பு மற்றும் விளையாட்டை துறக்க வேண்டியதானது. கடலில் மீன் பிடிக்க சென்ற எனது தந்தையின் கட்டு மரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உடல் ரீதியாக பெருத்த பாதிப்புக்கு உள்ளானார்.

இதனால் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. எனது பெற்றோரையும், 5 அக்காள்களையும் காப்பாற்றுவதற்காக பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். இருப்பினும் கிரிக்கெட் ஆர்வம் அடிமனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருந்தது.

பட்ட காலிலே படும் என்பது போல் 2014-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் கடற்கரை கிராமமான பள்ளத்தில் உள்ள எங்கள் குடும்பம் பெருத்த பொருட்சேதத்துக்கு உள்ளானது. கட்டுமரம், மீன்பிடி வலைகள் ராட்சத அலையில் சிக்கி சின்னாபின்னமானது. இதைத்தொடர்ந்து எனது கவனம் கிரிக்கெட் பக்கம் முழுமையாக திரும்பியது.

எனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்கமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், எனது சொந்த கிராமத்தினரும் நல்ல ஊக்கம் அளித்தனர். மாவட்ட அளவிலான போட்டியில் சதம் அடித்த நான், வேலூர் மாவட்டத்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ உள்பட 8 விக்கெட்டுகளும் வீழ்த்தினேன். இதன் மூலம் நான் ரஞ்சி கோப்பை போட்டிக்கான தமிழக அணியிலும் இடம் பிடித்தேன். 2015-ம் ஆண்டில் நடந்த ரஞ்சி போட்டியில் அரியானாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினேன்.

கிரிக்கெட்டில் எனக்கு தொடக்க 5 ஆண்டு காலம் கடுமையானதாகவே இருந்தது. வருவாய்க்கு வழியின்றி தவித்தேன். ஆனால் தற்போது எனது நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் டிவிசன் லீக் போட்டியில் விளையாடி வருகிறேன். ஒரு நேரத்தில் எனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் 10 பேராவது விரும்பி பார்ப்பார்களா? என்று நினைத்தது உண்டு. ஆனால் இப்போது பேஸ்புக்கில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் என்னை பின் தொடருகிறார்கள்.

தற்போது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதுகிறேன். இதில் எனது திறமையை நிரூபித்து சரித்திரம் படைக்க தயாராகவும், தாகமாகவும் இருக்கிறேன். நான் கிரிக்கெட்டில் ஈடுபடும் போது பலரும் எனது வசதி வாய்ப்பு, படிப்பு ஆகியவற்றை சொல்லி இவனுக்கு இதெல்லாம் தேவையா? என்று ஏளனம் செய்தனர்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் விளையாடுவதன் மூலம் எனது ஆட்டத்தை பலரும் டெலிவிஷனில் பார்ப்பார்கள். திறமையும், கடின உழைப்பும் இருந்தால் எத்தகைய குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கிரிக்கெட்டில் முடிந்த அளவுக்கு சாதித்து விட்டு மீண்டும் எனக்கு பிடித்தமான மீன் பிடிக்கும் தொழிலுக்கு திரும்புவேன். அது தான் என்னை இந்த அளவுக்கு ஆளாக்கியது. அதனை ஒருபோதும் மறக்கமாட்டேன். மறக்கவும் கூடாது. இவ்வாறு அந்தோணி தாஸ் கூறினார்.