ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய வைகோவை சிங்களர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றதற்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், கூறியதாவது:-
இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை போர்க்குற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் கவுன்சில் இலங்கை அரசுக்கு 2012 ஆம் ஆண்டில் இருந்து, பல பரிந்துரைகளைச் செய்தது.
ஆனால், எந்தப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை.
தமிழர்களாகிய நாங்கள் மிகவும் வேதனைப்படுவது யாதெனில், ஆறு மாத காலத்தில் அதிலும் 2009 மே மாதம் வரையில் 1,46,000 தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா.மன்றம் தவறி விட்டது.
இன்னும் வேதனையானது என்னவென்றால், தற்போது தமிழ் இனக்கலாச்சாரப் படுகொலை உட்பட, கட்டமைக்கப்பட்ட படுகொலை சிங்கள அரசால் நடத்தப்படுகின்றது. தமிழ்ப்பெண்கள், குறிப்பாக, 90000 போர்க்கால விதவைகள் கதறுகிறார்கள். பெண்கள் காணாமல் போன தங்கள் கணவன், தந்தை, பிள்ளைகளைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல், துயரத்தில் வாடுகிறார்கள்.
இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், ஊடக நேர்காணல்களில் 2015 தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டியது இல்லை என்றும், போர்க்குற்றங்கள் விசாரணை எதுவும் நடக்காது என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்றைக்கும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான சித்திரவதையும், படுகொலைகளும் சிங்கள இராணுவம், போலீசால் நடத்தப்படுகின்றது.
உதாரணமாக 2016 டிசம்பரில் யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் நடராஜன் கஜன், பவுன் ராஜ் சுலக்சன் சிங்களப் போலீசாரால் மிருகத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு சிங்கள இராணுவம் ஆளாக்குகிறது.
கிளிநொச்சியில் கடந்த 210 நாள்களாக ஈழத் தமிழ்ப் பெண்கள் தாய்மார்கள் நீதிகேட்டு தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். மனித குலத்திற்கு எதிராக வட கொரியா நடத்திய குற்றங்களை விசாரிக்க என்ன ஏற்பாடுகள் நடந்தனவோ, அதே ஏற்பாடு ஈழத்தமிழர்களுக்கும் நடக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
பேசி முடிந்ததும் சிங்களர்கள் சிலர் வைகோவைச் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீ இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார்.
உடனே வைகோ பொறுமையாக, நீங்கள் யார்? இலங்கையைச் சேர்ந்தவரா? நீங்கள் சிங்களப் பெண்மணியா? என்று கேட்டார்.அதற்கு அந்தப் பெண்மணி ஆமாம் என்றார்.
நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள் கொடி இரத்த உறவு இருக்கின்றது. எனக்குப் பேச உரிமை உண்டு என்றார்.
அதற்குள் அவரைச் சூழ்ந்து கொண்ட சிங்களவர்கள், விடுதலைப்புலிகள் கொடூரமான கொலைகாரர்கள். அக்கிரமக்காரர்கள். அவர்களை ஆதரித்து நீ எப்படிப் பேசலாம்? என்றார்கள்.
லட்சக்கணக்கான தமிழர்களை நீங்கள் கொன்றீர்கள். எங்கள் தாய்மார்கள் சகோதரிகளைக் கற்பழித்துக் கொன்றீர்கள் எங்கள் பச்சைக் குழந்தைகளைக் கொன்றீர்கள். நீங்கள் கொலைகாரப் பாவிகள் என்றார். இப்படிச் சூழ்ந்துகொண்டு வைகோவிடம் தகராறு செய்த சிங்களவர்களுள் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர்தான் பெரும்பான்மையாக இருந்தார்கள். அவர்கள் 35 பேர் வந்து இருக்கின்றார்கள். இதனால் வைகோவின் பாதுகாப்பு குறித்து ஈழத் தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சிங்களர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றதற்கு, தி.மு.க. சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித உரிமைக் கவுன்சிலுக்கு உள்ளேயே, இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது. இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.