தினகரன் அணியினர் மீது வருமானவரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.

242 0

தினகரன் அணியினர் மீது வருமானவரி சோதனை, வழக்கு போடுவது பழிவாங்கும் நடவடிக்கை என தகுதி நீக்கம் செய்யப்பட்ட தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

அ.தி.மு.க. அம்மா அணி மாநில பொருளாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரெங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை தொகுதி மக்களுக்காக எப்போதும் பணியாற்றக்கூடியவன் நான். அவர்களின் கோரிக்கையை உடனடியாக சரி செய்து கொடுத்திருக்கிறேன். தஞ்சை தொகுதிக்கு 27 முக்கிய கோரிக்கையை முதல்அமைச்சரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அக்கறை காட்டவில்லை. அது தான் எங்களுக்கு முதல் அதிருப்தி. ஜெயலலிதா தஞ்சை தொகுதிக்கு முன்னுரிமை கொடுப்பார். ஆனால் தற்போது பல அறிவிப்புகளில் தஞ்சை தொகுதி இல்லை.

எனது சட்டமன்ற அலுவலகம் இன்னும் பூட்டப்படவில்லை. அதற்கான அறிவிப்பு இதுவரை வரவில்லை. நாங்கள் அலுவலகத்திற்கு செல்வோம். தொகுதி மக்களுக்கு பல திட்டங்களை ஜெயலலிதா மூலம் செய்துள்ளேன். தொகுதி மக்களுக்கு நம்பிக்கை உள்ளவனாக இருப்பேன். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்கும் வாய்ப்பு இல்லை. மரணத்தில் சந்தேகம் உள்ளவர்கள் எந்த விசாரணை வைத்தாலும் அந்த விசாரணையில் சசிகலா களங்கம் அற்றவர் என நிரூபிப்பார்.

எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார். உண்மை நிலை தெரியாமல் அமைச்சர்கள் பேச வேண்டாம். மக்கள் இதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். என்னை தவிர மற்ற உறுப்பினர்களுக்கு தற்போது உள்ள ஆட்சியாளர்கள் மூலம் மிரட்டல்கள் வருகிறது.

தினகரன் அணியினர் மீது வருமானவரி சோதனை, வழக்கு போடுவது பழிவாங்கும் நடவடிக்கையாகும். ஜெயலலிதா ஆட்சி தற்போது நடைபெறவில்லை என்பது தான் எங்கள் போராட்டத்தின் நோக்கம். முதல்அமைச்சரை மாற்ற வேண்டும். கட்சியை விட்டு சசிகலாவையும், தினகரனையும் விலக்க என்ன காரணம். அச்சத்தின் காரணமாக யாருக்காகவோ இந்த கட்சியை விட்டுக்கொடுக்க முன்வருகிறார்கள். சசிகலா பரோலில் வெளிவந்தால் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். தினகரன் அறிவிப்புக்கு பிறகு விரைவில் பொதுக் குழுவை கூட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment