பெரியாறு அணை விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்குவது குறித்து கேரளா- தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பார்கள் என்றார். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு செயலாளர் செங்குட்டுவன் கூறுகையில், பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளது. அதற்கான நடவடிக்கையைதான் தமிழக பொதுப்பணித்துறையினர் எடுக்க வேண்டும்.
அணை பகுதியில் 17 ஆண்டுகளாக மின் சப்ளை இல்லை. மின்சாரம் கொண்டு வருவதற்காக தமிழக அரசு சார்பாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக ரூ.7.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாறு அணைக்கு தமிழக அதிகாரிகள் ஆய்வுக்கு சென்று வர ரூ.1 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய படகை இயக்குவதற்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் இன்று வரை அனுமதி பெற முடியவில்லை. இவை யாவும் நடைமுறை படுத்த வேண்டும். அதை விடுத்து கேரள அரசுடன் பேச்சுவார்த்தை என்பது தேவையில்லாதது. இவ்வாறு அவர் கூறினார்.