நாட்டின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பெரும்பான்மையானவர்கள் ஊழல்வாதிகள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி அரசியல் வாதிகள் நேற்றைய தினமும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.
பிரதியமைச்சர், சட்டம் மற்றும் மஹா சங்கத்தினர் தொடர்பில் மேற்கொண்ட கருத்தை வன்மைiயாக கண்டிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பெரும்பான்மையானவர்கள் ஊழல்வாதிகள் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 21ஆம் திகதி தெரிவித்தார்.
பெரும்பாலான சட்டத்தரணிகளே நாட்டை சீரழித்தனர்.
இதுவே கசப்பான உண்மை.
மகாத்மா காந்தியும் சட்டத்தரணியே.
எனினும் அவர் மக்கள் நலன் கொண்ட சட்டத்தரணி.
இலங்கையில் இருக்கும் பெரும்பாலான நீதிபதிகள் ஊழல் வாதிகள், பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள்.
95 சதவீதமானவர்கள் அவ்வாறே இருக்கின்றனர்.
அவர்கள் பணத்திற்காக வேலை செய்கின்றனர்.
அவர்கள் எப்போது கொலையாளி, மோசடிகாரர்கள், போதைபொருள் வர்த்தகர்களை எப்போதும் பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்த கருத்து தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் நேற்று கருத்து வெளியிட்டார்.
அவரது கருத்தை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டார்.
நாட்டின் பெரும்பாலான சட்டத்தரணிகள், சட்டத்தை மதிக்கின்றனர், அவர்கள் நாட்டின் மீது பற்றுக்கொண்டு செயற்படுகின்றனர்.
சமய தலைவர்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மனோகணேசன் குறிப்பிட்டார்.
அதேநேரம், ரஞ்சன் ராமநாயக்க, மஹாசங்கத்தினரை அவமதிக்கும் போதும், சட்டத்துறையினரை அவமதிக்கும் போதும் அதனை நிராகரிப்பதற்கு அரச தலைவர்கள் முன்வரவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹாசங்கத்தினரையும், சட்டத்துறையினரையும் அவமதித்த ஒப்பந்தத்திற்கு ரஞ்சன் ஜெனிவா அமர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் கருத்து வெளியிட்டார்.
ரஞ்சன் ஒவ்வொரு நேரம் இவ்வாறு நகைச்சுவை கருத்துக்களை வெளியிடுவார்.
அது குறித்து கவனத்தில் எடுக்க தேவையில்லை.
எனினும் நீதிமன்றம் குறித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நீதித்துறைக்கான மதிப்புக்களை நிச்சியம் வழங்க வேண்டும் என்று அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.