மு.க.ஸ்டாலின், துரைமுருகன் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி சட்டசபை கூட்டத்தை மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்து நடத்தினர்.
சட்டசபையில் நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 80 பேர் வெளியேற்றப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
நேற்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 89 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு செல்ல முயன்றனர். ஆனால் சபை காவலர்கள் அவர்களுக்கு அனுமதி மறுத்ததுடன் எம்.எல்.ஏ.க்கள் செல்லும் 4-ம் எண் வாயிலை பூட்டி விட்டனர்.
இதனால் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.முக. எம்.எல்.ஏ.க்கள் 4-ம் எண் வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். 2 மணி நேரத்துக்கு பின்பு அனைவரும் களைந்து சென்றனர்.
இதற்கிடையே சஸ்பெண்டு செய்யப்படாத 9 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் தவிர மற்ற 7 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்ததால் வெளிநடப்பு செய்து அவர்களும் தர்ணாவில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தாலும் மீண்டும் சபைக்கு சென்று சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்த திட்டமிட்டு சட்டசபை வளாகத்துக்கு வந்தனர்.
தா.மோ.அன்பரசன், சுரேஷ் ராஜன், மா.சுப்பிரமணியன், தாம்பரம் ராஜா, கு.க. செல்வம், மாசிலாமணி, வரலட்சுமி மதுசூதனன், கீதாலட்சுமி, இ.கருணாநிதி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சபை வளாகத்தின் முன் காத்து நின்றனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை செயலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதே போல் சட்டசபை வளாகத்திலும் காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு உள்ளே செல்லும் வாயிலின் இரு புறமும் வரிசையாக நின்று இருந்தனர்.
சஸ்பெண்டு ஆகாத எம்.எல்.ஏ.க்களை மட்டும் அடையாள அட்டையை காட்டிய பின்பு உள்ளே அனுமதித்தனர். மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு வழக்கம் போல் சட்டசபை கூடியது. இதில் சஸ்பெண்டு ஆகாத 8 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
போளூர் தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர் நேற்று முன்தினம் சட்டசபைக்கு வரவில்லை. ஆனால் அவரது பெயர் சஸ்பெண்டு ஆனவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து தவறு சரி செய்யப்பட்டு இன்று போளூர் சேகர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் சஸ்பெண்டு ஆகாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, காந்தி, மோகன், ராமச்சந்திரன், பூங்கோதை ஆகியோரும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். சஸ்பெண்டு ஆகாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, சாக்கோட்டை அன்பழகன் ஆகிய இருவர் மட்டும் சட்டசபைக்கு வரவில்லை.
முன்னதாக தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், “இன்றும் சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு தொடர்பாக பிரச்சினையை எழுப்புவோம். சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுப்போம்” என்றார்.
போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததாலும் சட்டசபை வளாகமும், தலைமைச் செயலகமும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் காலை 10.15 மணிக்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் சட்டசபை வளாகம் வந்தனர். அவர்கள் சட்டசபைக்கு வெளியே மரத்தடியில் நாற்காலிகள் போட்டு அமர்ந்து போட்டி சட்டசபை கூட்டம் நடத்தினார்கள்.
மைக் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. இதில் சஸ்பெண்டு செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். துரைமுருகன் சபாநாயகர் போல் அமர்ந்து போட்டி சட்டசபையை நடத்தினார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக மைக்கில் பேசினார்கள். அவர்களின் கேள்விகளுக்கு துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் பதில் அளித்தனர்.
ஆளுங்கட்சி வரிசை, எதிர்க்கட்சி வரிசை போல் எதிர்எதிரே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து கேள்விகள் கேட்டனர். சட்டசபையில் நடப்பது போலவே மாதிரி சட்டசபை நடத்தினர். சட்டசபையில் நடப்பது போல் கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தினார்கள்.இதையடுத்து அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து நின்று இருந்தனர்.போட்டி கூட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக கூடுதலாக போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. அப்படி கைது செய்யப்பட்டால் அவர்களை ஏற்றிச் செல்வதற்காக போலீஸ் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. ஆனால் அதற்குள் திமுக உறுப்பினர்கள் அனைவரும் போட்டி சட்டசபை கூட்டத்தை முடித்துவிட்டு கலைந்து சென்றனர். ,இதனால் இன்று சட்டசபை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.