சட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர். தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியை சேர்ந்த தி.மு.க.வினரை அவைக்காவலர்களை வைத்து கூண்டோடு வெளியேற்றியதையும், அதே ஒரு வார காலத்திற்கு அவர்களை சஸ்பெண்ட் செய்து அறிவித்து இருப்பதும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையையே நினைவுபடுத்தியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தே.மு.தி.க. தினந்தோறும் மக்கள் பிரச்சனைகளையும், தொகுதி பிரச்சனைகளையும் பேச முற்பட்ட போதெல்லாம் இதுபோன்ற முறையற்ற நிகழ்வுகளையே அ.தி.மு.க. அரசு அரங்கேற்றியது. அவையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை முற்றிலும் செயல்படவிடாமல் தடுத்து, அரசுக்கு எதிராக யாரும் பேசி விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர்களின் மைக்குகளை செயல்படவிடாமல் செய்வதும், அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றுவதும், நீண்ட நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதும் என்று சட்டமன்ற மரபுகளை கேள்விக் குறியாக்கும் அளவு செயல்பட்டனர்.
நியாயத்தை கேட்ட தே.மு.தி.க.வினரின் உண்மை நிலையை மக்களிடையே கொண்டுசெல்ல விடாமல் பல்வேறு வகையிலும் தடுத்தனர். அதனால் தான் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது அவசியம் என்று வலியுறுத்தி பல தடவை அரசிடம் கேட்டும் பலனில்லாமல் போனது. நேரடி ஒளிபரப்பு செய்ய பல கோடி ரூபாய் செலவாகும் என்று காதில் பூ சுற்றுவதை போல சாக்குப் போக்கு சொல்லி நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.
தே.மு.தி.க. கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்ட கஷ்டத்தின் தொடக்கமாக தி.மு.க.வின் இன்றைய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. இவர்கள் இருவரும் மாறி, மாறி இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி தமிழக சட்டசபையின் கலாச்சாரத்தை மாற்றிவிட்டார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்த சட்டசபை, மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், இவர்கள் இரண்டு பேர்களுக்கும் இடையே நடக்கும் போர்க்களமாகவே இந்த சபையை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதற்குத்தான் காமராஜர் சொன்னார் இந்த (அ.தி.மு.க., தி.மு.க.) இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு சான்றாகவே இந்த சட்டசபை அரங்கேறி கொண்டுருக்கிறது. இந்த நிலைகள் தமிழகத்தில் முற்றிலும் மாற, இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.