கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்ஹ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 லட்ச ரூபா வீதம் இரண்டு பிணைகளில் செல்ல அனுமதிக்குமாறு பெல்மதுளை நீதவான் ஜனிதா ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்த அவர் இது தொடர்பான வழக்கை எதிர்வரும் நொவம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சிலரால் துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றமிழைத்தவரை பாதுகாத்தமை தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை காவற்துறை விஷேட விசாரணை பிரிவினர் கைது செய்தனர்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர் ஒருவர் பலியானார்.
சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக ரத்தினபுரி மேல்நீதிமன்றில் வழக்கு விசாரணை ஒன்று இடம்பெறுகின்றது.
அத்துடன் புங்குடுத்தீவு மாணவி வித்தியா பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகத்துக்குரியவரான சுவிஸ்குமாருக்கு பாதுகாப்பு அளித்து தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அந்த காலப்பகுதியில் அவர் வடமாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்மா அதிபராக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடதக்கது.