வாகரையில் அனுமதியின்றி வணக்கஸ்தலம் அமைக்க முடியாது – யோகேஸ்வரன் எம்.பி

2502 0

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் ஆராயப்படாமல் புதிதாக எந்தவொரு வணக்க ஸ்தலங்களும் கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

புதிதாக வணக்க ஸ்தலங்கள் அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டு அரச சுற்றுநிருபத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் இந்த விடயத்தில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று திங்கட்கிழமை வாகரைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வாகரை அம்மந்தனாவெளி கிராம சேவகர் பிரிவில் மத மாற்றங்கள் நடைபெறுவதாகவும் அனுமதியின்றி பிரசார நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும் பிரதேச மக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரதேச மக்களினால் கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

யாரும் எந்த மதத்தையும் பின்பற்ற முடியும். இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரும் எந்த கடவுளையும் வழிபாடு செய்ய முடியும். ஆனால் ஏனைய மதத்தவருக்கு இடையூறு விளைவிக்காமல் கொச்சைப்படுத்தாமல் வழிபட முடியும்

வணக்க ஸ்தலங்கள் பதியப்பட வேண்டும். பதியப்படாத வணக்க ஸ்தலங்களை தடை செய்வதற்கு பிரதேச செயலகத்திற்கு உரிமை உள்ளது. தற்போது நான்கு பேர் கூடி வணக்க ஸ்தலமொன்றை உருவாக்கிறார்கள் இதனால் சமூகங்களிடையே பிரச்சினை ஏற்படுகிறது. இது மதப் பிரச்சினையில் ஆரம்பிக்கப்பட்டு இனப்பிரச்சினையாக மாறுகிறது.

மதமாற்றத்தை யாரும் தடுக்க முடியாது சமூக ரீதியாக சார்த்வீக ரீதியில் பிரதேச மக்கள் இணைந்து மதமாற்றத்தை தடுக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள முடியும் என்றார்.

Leave a comment