ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு என அமெரிக்க பள்ளியில் 12 வயது சிறுவனிடம் பொய் வாக்குமூலம் பெறப்பட்டது.
அமெரிக்காவில் லாங் தீவு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நஷ்வான் உப்பால். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவன். இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.
கடந்த ஜனவரி 8-ந்தேதி பள்ளியில் சக மாணவர்களுடன் அமர்ந்து உப்பால் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவனை மற்ற மாணவர்கள் இகழ்ச்சியாக பேசினார்கள்.
நீ ஒரு தீவிரவாதியா? உனக்கு வெடிகுண்டு தயாரிக்க தெரியுமா? உனக்கு ஒசாமா பின்லேடனை தெரியுமா? ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் உனக்கு தொடர்பு உள்ளதா? என சரமாரியாக கேள்வி கேட்டு துன்புறுத்தினர். இதற்கு பதில் கூறாமல் அவன் அவர்களிடம் இருந்து நழுவி சென்றான்.
அதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் இதே கேள்வியை அவனிடம் கேட்டனர். போலீசிலும் புகார் செய்தனர். அதில் அவனுக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. வீட்டில் வெடிகுண்டு தயாரித்து வந்து பள்ளி கட்டிடத்தை தகர்க்க திட்டமிட்டு இருக்கிறான் என்றனர்.
உடனே போலீஸ் அதிகாரி வரவழைக்கப்பட்டார். அவரும் சிறுவன் உப்பாலிடம் இதே கேள்வியை கேடடார். மேலும் தான் ஒரு ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளன் என்று பொய் வாக்குமூலம் எழுதி வாங்கினார்.
சிறுவனின் தாயாரை வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. வீட்டிற்கும் வந்து வெடிகுண்டு உள்ளதா? என போலீசார் சோதனை நடத்தினர். அதில் எதுவும் சிக்கவில்லை. மாணவன் உப்பால் ஒரு வாரம் பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டான். இதனால் அவன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பீதி அடைந்தான்.
தனது மகன் உப்பாலிடம் தேவையின்றி பொய் வாக்குமூலம் பெற்ற பள்ளி நிர்வாகம் மீது அவனது பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ரூ.168 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளனர்.