அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
மதுரை வண்டியூரில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் இரு அணிகளும் கருத்து வேறுபாடுகளை அகற்றி இணைந்து விட்டது. இதனால் சீரான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனை சீர்குலைக்கும் நோக்கத்தில் தி.மு.க.வினர் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறார்கள். மக்களிடம் பொய்களை பரப்பி வருகிறார்கள்.
மேலும் பாரதிய ஜனதாவின் அடிமைகளாக அ.தி.மு.க.வினர் மாறி விட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருகிறோம்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் துரோகத்தை இழைத்த தி.மு.க.வினருக்கு அ.தி.மு.க.வை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது.
எனவே அ.தி.மு.க. மீண்டும் வலிவோடும், பொலிவோடும் விளங்கி வருகிறது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.