பொதுப்பணித் துறையில் இருந்து, நீர் வளத்துறையை பிரித்து, பிரத்யேக துறையாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையில், கட்டடங்கள், நீர்வளத் துறை, நீராய்வு நிறுவனம், கொதிகலன் இயக்கம் உட்பட, பல பிரிவுகள் உள்ளன. கட்டடங்கள் பிரிவின் கீழ், உயர் நீதிமன்றம், அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் பராமரிக்கப்படுகின்றன. நீர் வளத் துறையானது, அணைகள், ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு போன்றவற்றை கவனிக்கிறது. நீர்வழித்தடங்களை மேம்படுத்தும் பணியையும் மேற்கொள்கிறது.
கேரளா, கர்நாடகா உட்பட, பல மாநிலங்களில் உள்ளது போல், நீர்வளத்துறையை தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக உள்ளது. விரைவில், நாடு முழுவதும் நதிகள் இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு துவங்க உள்ளது. இதனால், மத்திய அரசின் உத்தரவுப்படி, பொதுப்பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை பிரிக்கப்பட்டு, தனித்துறையாக அறிவிக்கப்பட உள்ளது.
அப்போது, துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் என்பதோடு, நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை மேம்படுத்தும் பணிகளையும், விரைந்து முடிக்க வாய்ப்பு உருவாகும்.