வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

773 0

பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருப்பதுடன், முதல்- அமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டம், வடக்கு வள்ளியூர், கேசவனேரி பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மகன் சுப்பையா என்பவர் வெடி விபத்தில் கடந்த 10-ந் தேதி அன்று உயிரிழந்தார்.

அதேபோல், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா, புலிப்பாறைப்பட்டி கிராமத்தில், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், வெம்பக்கோட்டையைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மனைவி பரமேஸ்வரி மற்றும் வெள்ளைச்சாமி என்பவரின் மனைவி பொன்னுத்தாய், சிவகாசி வட்டம், ஆணையூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மனைவி வசந்தா மற்றும் ராமலிங்கம் என்பவரின் மனைவி காந்தி ஆகியோர் கடந்த 20-ந் தேதி அன்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங் கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a comment